தலைமறைவாக இருந்த விஜயகுமார் திடீர் . . .

மகளும், நடிகையுமான வனிதா தொடர்பான வழக்கு சம்பந்தமாக, ஐதராபாத்திலிருந்து நடிகர் விஜயகுமார், புறநகர் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் நேரில் திடீரென ஆஜரானார்.

நடிகை வனிதாவின் மகனை விஜயகுமார் வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் வெடித்தது. நடிகர் விஜயகுமார் கொடுத்த புகாரை அடுத்து,  வனிதாவின் கணவர் ஆனந்தராஜனை மதுரவாயல் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின், ஆனந்தராஜன் தினசரி மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன்,  ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கணவனை கைது செய்ததால் கொதித்துப்போன நடிகை வனிதா, விஜயகுமார், அவரது மனைவி மஞ்சுளா, விஜயகுமாரின் முதல் மனைவியின் மகன் அருண் விஜய் ஆகியோர் மீது மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், நடிகர் விஜயகுமார்,  மஞ்சுளா மற்றும் அருண் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், இந்த வழக்கை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி., லத்திகா சரண் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, புறநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு கடந்த 29ம் தேதி கணவர் ஆனந்தராஜனுடன் நடிகை வனிதா வந்தார். அங்கு புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை  வனிதா  சந்தித்து, விளக்கம் அளித்தார்.

பின் நிருபர்களிடம் கூறியதாவது: என்னுடைய மகனை காப்பாற்ற விஜயகுமார், மஞ்சுளா ஆகியோர் யார்? இந்த வழக்கில் முக்கிய நபரான விஜயகுமாரின் முதல் மனைவி மகன் அருண் விஜயை நாடு கடத்திவிட்டு நாடகமாடுகின்றனர் என்றார். அடுத்த கட்டமாக,  சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து, புதிய புகார் ஒன்றை வனிதா கொடுத்தார். அதில், “நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் நுழைந்த மூன்று மர்ம நபர்கள் தன்னுடைய குழந்தையை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர்.  மேலும், அருண் விஜய் மொபைல் போனில்  கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், தனக்கும், தன்னுடைய குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று  குறிப்பிட்டிருந்தார்.

சென்னை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவுப்படி, நுங்கம்பாக்கம் போலீசார், அருண் விஜய் உட்பட நான்கு பேர் மீது புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். அருண் விஜய் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ள நிலையில், தற்போது புதிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை நகர போலீசார், நடிகர் விஜயகுமார் உள்ளிட்டவர்களை தேடி வந்தனர். நடிகர் விஜயகுமார், அவரது மனைவி நடிகை மஞ்சுளா மற்றும் விஜயகுமாரின் முதல் மனைவி மகன் அருண் விஜய்  ஆகியோர் ஐதராபாத்தில் தலைமறைவாகியிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகை வனிதா  தன் மீது கொடுத்த புகார் சம்பந்தமாக,  விளக்கம் அளிப்பதற்காக நடிகர் விஜயகுமார், புறநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு  திடீரென வந்தார்.  பின், புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் பிரிவுக்கு சென்ற அவர், அங்கு அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்தார். மத்திய குற்றப் பிரிவில் சிறிது நேரம் இருந்த நடிகர் விஜயகுமார், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அதிகாரிகளிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நடிகர் விஜயகுமார் எவ்வித தகவலும் இன்றி, புறநகர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சத்தமில்லாமல் திடீரென ஆஜரான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்று தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *