வனிதா மகன் கோர்ட்டில் ஆஜர்: விசாரணை தள்ளிவைப்பு

நடிகை வனிதா – நடிகர் ஆகாஷ் மகன் விஜய் ஸ்ரீஹரி, நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டான். ரகசிய விசாரணை கோரியதை தொடர்ந்து, விசாரணை 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. இவருக்கும், நடிகர் ஆகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். வனிதா – ஆகாஷ் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். பின், ஆனந்த்ராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். தன் வசம் இருந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை, ஆகாஷ் பலவந்தமாக கடத்தி சென்றதாகவும், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரி, சென்னை ஐகோர்ட்டில் நடிகை வனிதா மனு தாக்கல் செய்தார்.  மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய, “டிவிஷன் பெஞ்ச் விஜய் ஸ்ரீஹரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு, விசாரணைக்கு வந்தது. விஜய் ஸ்ரீஹரியை அவனது தந்தை ஆகாஷ், கோர்ட்டுக்கு அழைத்து வந்திருந்தார். நீதிபதிகள் முன் விஜயை ஆஜர்படுத்தினர்.  நடிகை வனிதா சார்பில் சீனியர் வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு, “இது குடும்ப பிரச்னை. விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என கோரினார். இதையடுத்து, விசாரணையை 16ம் தேதிக்கு, “டிவிஷன் பெஞ்ச் தள்ளி வைத்தது. பள்ளிக்கு விஜய் செல்ல வேண்டும், அவனை தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என, சீனியர் வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு கேட்டார். அதற்கு, ஆகாஷ் வக்கீல் எம்.கே.இதயதுல்லா ஆட்சேபனை தெரிவித்தார். பின், மகனிடம் பேச தாயாரை அனுமதிக்க வேண்டும் என வனிதாவின் வக்கீல் கோரினார்.

சிறுவன் விஜயை பதிவாளர் ஜெனரல் அலுவலகத்துக்கு அழைத்து செல்லுமாறும், அங்கு பதிவாளர் ஜெனரல் முன், விஜய் உடன் அவரது தாயார் பேசலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். விஜயை கோர்ட் அதிகாரி ஒருவர், பதிவாளர் ஜெனரல் அலுவலகத்துக்கு அழைத்து சென்றார். அங்கு விஜய் உடன் தாயார் வனிதா பேசினார். 10 நிமிடங்கள் அங்கு இருந்தனர்.  அறையை விட்டு வெளியே வரும் போது, விஜயும், வனிதாவும் அழுதபடி இருந்தனர். பின், மகனை அழைத்துக் கொண்டு ஆகாஷ் புறப்பட்டு சென்றார்.

வனிதா தாக்கல் செய்த மனுவுக்கு, ஆகாஷ் தாக்கல் செய்த பதில் மனு: என் மகன் விஜயை நான் கடத்தியதாக கூறுவது தவறு. வனிதாவுக்கும், அவரது பெற்றோருக்கும் நடந்த பிரச்னையில், விஜயை என்னிடம் கடந்த மாதம் 7ம் தேதி வனிதா ஒப்படைத்தார். விஜய் விருப்பப்படி அது நடந்தது.  தாயாருடன் வசிக்க முடியவில்லை என அவன் கூறினான். விஜயை ஆனந்த் ராஜன் கொடுமைப்படுத்தியுள்ளார். மோசமாக நடத்தியுள்ளார்.

கடந்த மாதம் 7ம் தேதி முதல் என் வசம் விஜய் உள்ளான். அவன் சந்தோஷமாக இருக்கிறான். மீடியாவில் வந்த செய்தியை பார்த்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றேன்.  அங்கு வனிதாவின் தந்தை விஜயகுமார் சேர்க்கப்பட்டிருந்தார். வனிதாவின் சம்மதம், விருப்பத்துடன் தான் விஜயை நான் அழைத்து சென்றேன். வனிதா, அவரது பெற்றோருக்கு இடையே நடக்கும் தகராறால், விஜய் சந்தோஷமாக இல்லை.  இதனால், அவனது வளர்ச்சி, மனநிலை பாதிக்கப்பட்டது. என்னிடம் சேர்ந்து இருப்பதை அவன் விரும்புகிறான்.  எனவே, தொடர்ந்து என் வசம் விஜய் ஸ்ரீஹரி இருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

குடும்ப நல கோர்ட்டில் ஆகாஷ் தாக்கல் செய்த மனுவில், “எங்களுக்குள் 2007ம் ஆண்டு பரஸ்பர விவாகரத்து ஏற்பட்டது. மகன் விஜய் ஸ்ரீஹரி என் வசமும், தாயார் வசம் மகளும் இருக்க வேண்டும் என எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது. செகந்திராபாத் கோர்ட்டில், மகனை வனிதா வசம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டேன். நியூசிலாந்தில் அவனை படிக்க வைப்பதாக வனிதா கூறினார். “அவர் அளித்த உத்தரவாதத்தை பின்பற்றவில்லை. இரண்டாவதாக வனிதா திருமணம் செய்துள்ளார். எனவே, மகனை அவர் வசம் வைத்திருக்கும் முன்னுரிமையை இழக்கிறார். விஜயின் நலத்தை அவர் கவனிக்கவில்லை. தாயாருடன் சேர்ந்து இருக்க விஜய் விரும்பவில்லை. எனவே, என் வசம் விஜய் இருப்பதில், வனிதா குறுக்கிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை, 16ம் தேதிக்கு குடும்ப நல கோர்ட் தள்ளி வைத்துள்ளது.

நாளேடு ஒன்றில் வெளியான செய்தி
புகைப்படங்கள் தொகுப்பு விதை2விருட்சம்

மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *