என்னைப்பார்த்து நடுங்குறா: மகன் விஜய்ஸ்ரீஹரியை மிரட்டி வைத்துள்ளனர் வனிதா கண்ணீர்

நடிகை வனிதாவின் மகன் விஜய்ஸ்ரீஹரி. 10 வயது சிறுவனான இவன் யாருடன் இருப்பது என்பது தொடர்பாக வனிதாவுக்கும், அவரது தந்தை விஜய குமாருக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விஜய குமார் கொடுத்த புகாரின் பேரில் வனிதாவின் 2-வது கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார்.

தன்னை தாக்கியதாக வனிதா கொடுத்த புகார் தொடர்பாக விஜயகுமார், மஞ்சுளா, அருண்விஜய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே விஜய் ஸ்ரீஹரி யாருடன் இருப்பது என்பது தொடர்பாக வனிதாவின் முதல் கணவர் ஆகாசுக்கும், வனிதாவுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் விஜய் ஸ்ரீஹரியை, ஆகாஷ் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார். அப்போது அவனுடன் பேசுவதற்கு வனிதாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தனி அறையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென விஜய் ஸ்ரீஹரி அழுதுகொண்டே வெளியில் வந்தான்.

இதுதொடர்பாக வனிதா கண்ணீர் மல்க கூறியதாவது:-

எனது மகன் விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் மிரட்டி வைத்துள்ளார். என்னை பழிவாங்குவதற்காக எனது தந்தை விஜயகுமார் அவரை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார்.
விஜய் ஸ்ரீஹரியை தனியாக சிறை வைத்து, எதையோ சொல்லி அவனை பயமுறுத்தியுள்ளனர். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் அவன் மிரண்டுபோய் உள்ளான்.
என்னுடன் இருந்தபோது மகிழ்ச்சியோடு தங்கைகளுடன் பாசமாக இருப்பான். இப்போது அவர்களை பார்த்தால் விலகி ஓடுகிறான்.
விஜய் ஸ்ரீஹரி மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான். அவனது திடீர் மாற்றத்தால் எனது 2 பெண் குழந்தைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணா… அண்ணா… என்று அவனது பாசத்துக்காக ஏங்குகிறார்கள்.
பள்ளிக்கு சென்ற இடத்தில் எனது 2 பெண் குழந்தைகளும் இதுபற்றி ஆசிரியர்களுடன் பேசியுள்ளனர். நீங்களாவது எங்கள் தாத்தாவுடன் பேசி, அண்ணாவை அனுப்பச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
பெற்ற தாய்க்குத்தான் பிள்ளை பாசம் தெரியும். நான் ஆசை ஆசையாய் வளர்த்த எனது மகன், என்னை வெறுக்கும் அளவுக்கு அவனது மனதை மாற்றியுள்ளனர். அவன் மனம் மாறி என்னுடன் மீண்டும் வருவான் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தாயும் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
விஜய் ஸ்ரீஹரி இதுநாள்வரை என்னுடன்தான் இருந்தான் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது. இதனை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளேன். எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த தாய்க்கும் ஏற்படக் கூடாது.  இவ்வாறு வனிதா கூறினார்.
(நாளேடு ஒன்றில் வெளியான செய்தி)
இதன்பின் வந்த புதிய செய்தி
மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *