படப்பிடிப்பும்,. பட வாய்ப்பும்

நடிப்புலகுக்கு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் வாய்ப்புகள் அமையும். “திருமதி செல்வம்’ லதாராவ் நடிக்க வந்தது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தபோது அமைந்தது. படப்பிடிப்பின் இடை வேளையில் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தற்போது என்ன என்ன நிகழ்ச்சிகள் போய் கொண்டிருக்கிறது?

ஜெயா  டிவியில் “வந்தாளே மகராசி’ தொடரிலும் சன் டிவியில் “திருமதி செல்வம்’ தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர பெரியதிரையில் “பரிமளா திரையரங்கம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

தொடர்களில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

“திருமதி செல்வம்’ தொடரில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறேன். “வந்தாளே மகராசி’ தொடரில் கதையின் நாயகிக்குப் பாசமான அண்ணியாக நடிக்கிறேன். இப்போதைக்கு இரண்டு தொடரிலுமே பாஸிட்டீவ்வான கதாபாத்திரங்கள்தான் செய்கிறேன். ஆனால் “திருமதி செல்வம்’ தொடரில் மட்டும் அடுத்து வரப்போகும் நாட்களில் என் கேரக்டர் நெகட்டீவ்வாக மாறும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பெரியதிரை, சின்னதிரை எதில் நடிப்பதுசுலபமாக இருக்கிறது?

நடிப்பைப் பொறுத்தவரை பெரியதிரை, சின்னதிரை என்பது கிடையாது. நம்ம என்ன கேரக்டர் செய்கிறோமோ, அந்த கேரக்டராக மாற வேண்டும் அவ்வளவுதான். மற்றபடி இரண்டுக்கும் நேரம் தான் வித்தியாசப்படும். பெரியதிரையைப் பொறுத்தவரை ஒரு ஷாட், பலமுறை எடுப்பார்கள். அதனால் நிறைய பயிற்சி எடுத்துக்கொள்ள நேரம் கிடைக்கும்.  ஆனால்  சின்னதிரையில் அப்படியில்லை. அடுத்தடுத்த ஷாட்டுக்கு உடனே போய்விடுவார்கள். அதனால் இங்கு நேரம் ரொம்ப குறைவு அவ்வளவுதான்.

உங்கள் கணவரும் இதே துறையில் இருப்பதனால், உங்களுக்கு எந்த அளவுக்கு உதவியாக  இருக்கிறது?

என் கணவர் ராஜ்கமல் நடிகர் என்பதால் நான் நடிப்பதற்கு நிறைய என்கரேஜ் செய்வார். இந்த மாதிரி கேரக்டர் செய்தால் நல்லா இருக்கும் என்று சொல்லுவார். நான்  பெரியதிரை படங்களில் நடிப்பதுகூட அவர் கொடுத்த ஊக்கம்தான். அவரும் இதே இண்டஸ்ட்ரியில் இருப்பதனால், இதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் அவரால் ஈசியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அது எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது.

நீங்கள் எப்படி இந்த துறைக்குள் வந்தீர்கள்?

ரொம்ப பிளான் பண்ணி நடிக்க வேண்டும் என்றெல்லாம் வரவில்லை. எனக்கு சொந்த ஊர் பெங்களூர். தாய் மொழி கன்னடம். வளர்ந்ததெல்லாம் சத்தியமங்கலம் பக்கத்தில் பவானி சாகர் என்ற ஒரு சின்ன கிராமத்தில்தான். ஒரு விசேஷத்துக்காக சென்னைக்கு வந்தபோது, அங்கே பக்கத்தில் “மெட்டி ஒலி’ தொடரின் ஷூட்டிங் நடந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள். அதை பார்க்கப் போன இடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்தத் தொடரில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தேன். அப்படித்தான் நடிப்புலகுக்கு வந்தேன்.

எதிர்கால திட்டம் என்ன?

இந்த இண்டஸ்ட்ரியில் வந்தபோது நடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று எந்தவித எதிர்பார்ப்பும் கற்பனையும் இல்லாமல்தான் நடிக்க வந்தேன். இப்போது இந்த துறைக்கு வந்தபிறகு எனக்கு இந்தத் தொழில் மீது உள்ள மரியாதையும் ஈர்ப்பும் அதிகமாகி விட்டது. இன்னும் நல்ல கேரக்டர்களில், நிறைய நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைய இருக்கிறது. அதேசமயத்தில் நடிகை என்பதையும் தாண்டி, நான் ஒரு மகள், மருமகள், மனைவி, ஒரு குழந்தைக்கு அம்மா என்று பல ஸ்தானங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் ஒழுங்காகச் செய்தால் போதும் என்று  நினைக்கிறேன்.

(நாளிதழ்களில் கண்டெடுத்த பேட்டி)

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *